திருநெல்வேலி மாவட்ட பாசனக் கிணறுகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் வழக்கமாக கிலோ ரூ.10 முதல் 12 வரை விற்பனையாகும் தடியங்காய், பூசணிக்காய் ஆகியவற்றின் விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடைமழை சரியாக பெய்யாத நிலையில் தென்மேற்குப் பருவமழையும் ஏமாற்றிவருகிறது. பிரதான அணைகளில் குடிநீர்த் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பதால், பாசனக் கால்வாய்களில் ஜூன் மாதத்தில் கார் சாகுபடிக்காக திறக்க வேண்டிய தண்ணீர் நிகழாண்டில் திறக்கப்படவில்லை. கடும் வறட்சி காரணமாக ஆலங்குளம், ராதாபுரம், சங்கரன்கோவில் வட்டங்களில் உள்ள பாசனக் கிணறுகள் நீரின்றி காணப்படுகின்றன. இதனால் தோட்டப் பயிர்கள் சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது.
கத்தரி, வெண்டை, தக்காளி ஆகியவற்றின் சாகுபடி குறைந்துள்ளதோடு, நிகழாண்டில் நீர்ச்சத்து மிகுந்த தடியங்காய், பூசணிக்காய் ஆகியவற்றின் விளைச்சலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்துக்கு மாறாக அவற்றின் விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது. இதேபோல இஞ்சி, சின்னவெங்காயம், கேரட் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி உழவர் சந்தையில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை விவரம் (கிலோவுக்கு): கத்தரிக்காய்-ரூ.16, வெண்டைக்காய்-ரூ.25, தக்காளி-ரூ.44, அவரை-ரூ.55, கொத்தவரை-ரூ.20, புடலங்காய்-ரூ.12, பீர்க்கங்காய்-ரூ.30, சுரைக்காய்-ரூ.10, பாகற்காய்-ரூ.25, மாங்காய்- ரூ.28, முருங்கைக்காய்- ரூ.56, பச்சைமிளகாய்- ரூ.25, வாழைக்காய்- ரூ.30, தடியங்காய்-ரூ.22, பூசணிக்காய்-ரூ.24, தேங்காய்-ரூ.29, வெள்ளரிக்காய்-ரூ.30, முள்ளங்கி-ரூ.20, காராமணி- ரூ.18 பல்லாரி- ரூ.25, சின்னவெங்காயம்-ரூ.58, சேனைக்கிழங்கு-ரூ.26, எலுமிச்சை-ரூ.50, தண்டுக்கீரை- ரூ.10, அரைக்கீரை-ரூ.10, குத்துப்பசலைகீரை-ரூ.10, மணத்தக்காளிகீரை- ரூ.20, கொத்தமல்லி கீரை-ரூ.80, உருளைக்கிழங்கு-ரூ.22, கேரட்-ரூ.64, பீட்ரூட்-ரூ.42, செளசெள-ரூ.38, ரிங் பீன்ஸ்-ரூ.125, இஞ்சி-ரூ.225, நெல்லிக்காய்-ரூ.50, வாழைப்பழம்- ரூ.70, நூல்கோல்-ரூ.40.