திருநெல்வேலி

குற்றாலத்தில் கொளுத்தும் வெயில்; வறண்ட அருவிகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

15th Jul 2019 08:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாகும். மிதமான சாரல், இதமான வெயில் இவற்றுக்கு இடையே அருவிகளில் குளிப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும். சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும்.
ஆனால், நிகழாண்டில் சீசன் மிகவும் காலதாமதமாகவே தொடங்கியது. பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்த அளவிலேயே இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், சீசன் களைகட்ட வேண்டிய ஜூலை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அனைத்து அருவிகளிலும் மிகவும் குறைவான அளவிலேயே தண்ணீர்விழுகிறது.
பழைய குற்றாலம் மற்றும் புலியருவியில் தண்ணீர்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டது. ஐந்தருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் இரண்டு கிளைகளில் மிகவும் குறைவாகவும், ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஒரு கிளையில் மட்டும் தண்ணீர் விழுகிறது. பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரமாக குறைந்த அளவிலும், பெண்கள் குளிக்கும் பகுதியில் மிகக் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஞாயிற்றுக்கிழமை பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT