திருநெல்வேலி

குடிமராமத்துப் பணிகள்: துணை ஆட்சியர் ஆய்வு

15th Jul 2019 07:07 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள குளங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை துணை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி வறட்சியை எதிர்கொள்ளவும், மழை நீரை சேமித்து புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
இதையொட்டி, மாவட்ட  ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும்  குடிமாரமத்துப் பணிகளை ஆய்வு செய்ய பகுதி வாரியாக அதிகாரிகள்  நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட  நாச்சியார்புரம் கல்கட்டிகுளம், காவலாக்குறிச்சி பெரியகுளம், ஊத்துமலை பெரியகுளம் ஆகிய குளங்களில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை துணை ஆட்சியரும்,  ஆதி திராவிடர்- பழங்குடியினர் நல அலுவலருமான கீதா ஆய்வு செய்தார்.
மேலும், விவசாய சங்கத்தினத்தினரிடம் கரையை  பலப்படுத்துவது, தடுப்பு சுவர் அமைப்பது,  கரையை உயர்த்துவது, மறுகாலை சீரமைப்பது,  குளத்தை ஆழப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து  பேசி, அவர்களின் தேவைகளையும்  கேட்டறிந்தார். ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், இடைநிலை பொறியாளர் அப்துல் ரகுமான், விவசாய சங்கத் தலைவர் பால்பாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT