திருநெல்வேலி

கடையநல்லூர் மலைப் பகுதியில் தீ

15th Jul 2019 07:09 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
புளியங்குடி அருகேயுள்ள டி.என்.புதுக்குடி பீட், சொக்கம்பட்டி பீட், கடையநல்லூர் மலைப் பகுதி உள்ளிட்டவற்றில் தீப்பற்றி எரிந்து வருகிறது. ஏற்கெனவே இப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குட்டி ஈன்ற யானைகள் உணவுக்காக திரிந்து வரும் நிலையில், வனத் துறையினர் பலத்த சிரமங்களுக்கு இடையே வனவிலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விலங்குகள் ஒன்றையொன்று விரட்டி வரும்போது மலையிலிருந்து உருண்ட கற்களால் தீக்கனல் உருவாகி தீப்பற்றியிருக்கலாம் என வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கோடை வெயிலால் புற்கள் அனைத்தும் காய்ந்து இருப்பதால் எளிதில் தீப்பற்றியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடையநல்லூர் வனச்சரகர் செந்தில்குமார் கூறியது: தீப்பிடித்துள்ள பகுதிக்கு வனத் துறையினர் 12 பேர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோரைப்புற்களில் பற்றிய தீ, புற்களில் மட்டுமே பரவி வருகிறது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT