கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை(ஜூலை15) நடத்தவிருந்த காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.
கடையநல்லூர் வட்டம், போகநல்லூர், நயினாரகரம் உள்ளிட்ட பகுதிகளில் காலியாகவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அழகப்பராஜா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். மேலும், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கு தகுதியான இடங்கள் தொடர்பாக சங்கத்தினரிடம் ஜூலை 27ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காத்திருப்புப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், வீட்டு மனை கோரி மனு அளிக்கப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.