ஆலங்குளம் சேகர 25ஆவது ஸ்தோத்திர பண்டிகை கொடியேற்றம் மற்றும் பவனியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
வழக்கமாக 4 தினங்கள் நடைபெறும் இப்பண்டிகை, நிகழாண்டு வெள்ளி விழா பண்டிகையாக இருப்பதால் 8 தினங்கள் கொண்டாடப் படுகிறது. இதன் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை சேகர மக்கள் கலந்துகொண்ட பவனியைத் தொடர்ந்து பண்டிகை நடைபெறும் பந்தலில் சிலுவைக் கொடி ஏற்றப்பட்டது. இரவு ஆயத்த ஆராதனையில் வடக்கு சபை மன்றத் தலைவர் வில்சன் சாலமோன் ராஜ் இறை செய்தி அளித்தார். தொடர்ந்து சேகர இளைஞர்கள் இயேசு நடந்த படியே யோவான் என்ற தலைப்பில் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
திங்கள்கிழமை மாலை சிறப்பு பட்டிமன்றம், செவ்வாய்க்கிழமை கன்வென்ஷன் கூட்டம், புதன்கிழமை பகலில் உபவாச ஜெபம், இரவு கன்வென்ஷன் கூட்டம், வியாழக்கிழமை சேகரத்தில் உள்ள பள்ளிகள், சபைகளைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியரின் பல்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியே கூட்டங்கள் நடைபெறுகிறது.
இரவில் நண்பர்கள் தரிசன ஜெபக்குழுவினர் நடத்தும் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
சனிக்கிழமை காலை ஞானஸ்நான ஆராதனையும் பிற்பகலில் பிரதான பண்டிகை ஆராதனையும் நடைபெறுகிறது. இதில் திருநெல்வேலி திருமண்டில குருத்துவ செயலர் பீட்டர் தேவதாஸ், திருமண்டில தலைவர் (பொறுப்பு) பில்லி, லே செயலர் வேதநாயகம், பேராயர் ஜெபச் சந்திரன், மேற்கு சபை மன்றத் தலைவர் சற்குணம் ஆகியோர் கலந்து கொண்டு இறை செய்தி அளிக்கின்றனர்.
இரவு ஐ.எம்.எஸ் ஆராதனை மற்றும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் நாசரேத் குரூஸ் மாசிலாமணி திருவிருந்து ஆராதனையை நடத்துகிறார். பிற்பகல் வருடாந்திர கூட்டத்தில் ஆலங்குளம் கத்தோலிக்க பங்குத் தந்தை அந்தோணிராஜ் இறை செய்தி அளிக்கிறார். இரவு கீத ஆராதனை மற்றும் பஜனை பிரசங்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
மேலும் விழாவில் 10, 11, 12 ஆம் வகுப்பில் சேகர அளவில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் படுகிறது. ஏற்பாடுகளை சேகர தலைவர் டேனியல் சாலமோன், செயலர் செல்வன் மற்றும் 9 சபை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.