திருநெல்வேலி

10 களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழாகும் கட்டடம்:இடநெருக்கடிக்கு தீர்வு காணப்படுமா?

12th Jul 2019 09:02 AM | சு. ராமையா

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறைகள் கொண்ட விசாலமான ஓட்டுக் கட்டடம் 10 ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் பாழாகி வருகிறது. பல ஆண்டுகளாக பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றனர்.
களக்காடு அரசுப் பள்ளி கடந்த 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 1200 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இட நெருக்கடி காரணமாக தற்போது பள்ளி இயங்கும் கட்டடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் மூங்கிலடியில் உள்ள பள்ளி விளையாட்டுத் திடலில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடியில் இரு தனித்தனி கட்டடங்களாக தரைத்தளம் மற்றும் முதல்மாடியில் 24 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு 11, 12ஆம் வகுப்புகள் அங்கு செயல்பட்டன.
ஆனால், புதிய கட்டடத்தில் விசாலமான வகுப்பறைகளோ, ஆய்வகம் அமைக்கப் போதுமான இடவசதியோ இல்லாததால் ஒரே வகுப்பறையில் மிகக் குறைவான மாணவர்களே அமர்ந்து கல்வி பயிலும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 11, 12ஆம் வகுப்புகள் நகருக்குள் அமைந்துள்ள பழைய பள்ளிக் கட்டடத்துக்கே மாற்றப்பட்டு, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை மூங்கிலடி கூடுதல் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், அங்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் சுமார் 3 கி.மீ. தொலைவு மாணவ, மாணவியர் நடந்தே செல்லும் நிலை உள்ளது. இவ்வாறாக இரு வேறு கட்டடங்களில் பள்ளி தனித்தனியாக இயங்கி வருவதால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன.
பாழாகும் ஓட்டுக் கட்டடம்: நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் அதிக மாணவர்கள் அமர்ந்து கல்வி பயிலக்கூடிய விசாலமான வகுப்பறைகள் கொண்ட ஓட்டுக் கட்டடம் கடந்த 10 ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி பாழ்பட்டு வருகிறது. 
இதைச் சீரமைக்கக் கோரி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பொதுப் பணித் துறைக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் உரிய கருத்துரு அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. ஓட்டுக் கட்டடம் சீரமைக்கப்படாததால் இங்குள்ள குறுகலான கான்கிரீட் கட்டட வகுப்பறைகளில் மாணவர்கள் நெருக்கமாக அமர்ந்து கல்வி கற்கும் அவலநிலை உள்ளது. இக்கட்டடத்தைச் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் இடநெருக்கடிக்கு தீர்வு கிடைத்துவிடும்.
பல பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை: இப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2-வில் கணிதம், கணினி அறிவியல், அறிவியல், வரலாறு, வேளாண் செயல்முறைகள், பொது இயந்திரவியல் ஆகிய 6 பாடப் பிரிவுகளும், ஆங்கில வழியில் கணினி அறிவியல் பாடப் பிரிவும் உள்ளன.  
இதில் முதுகலை தமிழாசிரியர்கள் இருவரில் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மாறுதலாகிச் சென்ற பின்னர், அந்தப் பணியிடத்துக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. முதுநிலை தாவரவியலில் ஒரே ஒரு பணியிடம் உள்ளது. அதற்கு கடந்த ஆண்டுகளாக ஆசிரியர் இல்லை. 
முதுநிலை கணித ஆசிரியர் பணிடங்கள் இரண்டில் ஒரு பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளது. வேளாண்மை பாடப் பிரிவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் இல்லாத நிலை தொடர்கிறது. வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடப் பிரிவுக்கும் ஆசிரியர்கள் இல்லை. பல்வேறு பாடப் பிரிவுகளுக்கும் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதுடன், மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
"அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றாமல் இருப்பதால்தான் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உள்ளடக்கிய களக்காடு அரசுப்  பள்ளியின் அவலநிலையை மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் பொருட்படுத்தாமல் இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது' என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார்.
10 ஆண்டுகளாக ஓட்டுக் கட்டடம் சீரமைக்கப்படாமல் இருப்பதுகுறித்து தலைமையாசிரியர் விஜயலெட்சுமியிடம் கேட்டபோது, ஓட்டுக் கட்டடத்தைச் சீரமைப்பது குறித்து அரசுக்கு தொடர்ந்து கருத்துரு அனுப்பி வருகிறோம் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT