திருநெல்வேலி

தென்னை விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

12th Jul 2019 09:03 AM

ADVERTISEMENT

கீழப்பாவூர் வட்டாரத்தில் தென்னை விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என  வேளாண்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் மு. உதயகுமார்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் வேளாண் துறை செயல்படுத்தும் இத்திட்டத்தில் ஒரு ஹெக்டேர் பரப்பில் நெட்டை மர தென்னங்கன்று நடவு செய்த விவசாயிகளுக்கு ரூ. 6,500 ம், நெட்டை-குட்டை ஒட்டு தென்னங்கன்று நடவு செய்த விவசாயிகளுக்கு ரூ. 6,750, குட்டை தென்னங்கன்று நடவு செய்த விவசாயிகளுக்கு ரூ. 7,500 மானியம் வழங்கப்படும். மானியத் தொகையை விவசாயிகளுக்கு இரு தவணைகளாக 2 வருடங்களுக்கு வழங்கப்படும்.
நிகழாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின் தென்னை மரக்கன்றுகள் நடவு செய்த கீழப்பாவூர் வட்டார விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். புதிய பரப்பில் தென்னை சாகுபடி செய்தவர்கள் வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்கள், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், நிலப் பட்டா, 40 தென்னங்கன்றுக்கு அதிகமாக இருந்தால் அதற்குரிய புகைப்படம் மற்றும் நில வரி ரசீது போன்ற ஆவணங்களுடன் அந்தந்த பகுதியிலுள்ள வேளாண் உதவி அலுவலரை விவசாயிகள் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 25  சென்ட் பரப்பிலும், அதிக பட்சமாக 10 ஏக்கர் பரப்பிலும் தென்னங்கன்றுகள் நடவு செய்த விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT