திருநெல்வேலி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

12th Jul 2019 09:07 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவானது, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிலையத்தின் ஒரு மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் தொழில்முனைவோர் சார்ந்த வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை பதிவேற்றும் வண்ணம் இணைய வலைப்பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு)  ஜெ.ஜான்சன் ராஜேஸ்வர் தலைமை வகித்துப் பேசுகையில், "மாணவர்கள் தமது புதுமையான சிந்தனைகள் மூலம் சிறந்த தொழில்முனைவோராக வேண்டும்' என்றார். திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாக முதல்வர் பெ.சுரேஷ்குமார் தொடக்கவுரையாற்றினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் அடிப்படை பயிற்சிக் குழுமத்தின் இயக்குநரும், கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவருமான வெ.ரமேஷ் சரவணக்குமார் வாழ்த்திப் பேசினார். தொழில்முனைவோர் மையத்தின் இணை இயக்குநர் ச.சைலாஷ் சற்குணம் வாழ்த்திப் பேசினார்.
 தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப் பேராசிரியர் சே.செந்தில்குமார் வரவேற்றார்.  இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் ந.அருள்நாதன் நன்றி கூறினார். 
     இதில் 180 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT