திருநெல்வேலி

உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுப் பேரணி: ஆட்சியர் தொடங்கிவைத்தார்

12th Jul 2019 09:06 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் உலக மக்கள்தொகை தின உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.
பாளையங்கோட்டையில் உள்ள லூர்து நாதன் சிலை அருகே மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கிவைத்து ஆட்சியர் பேசியதாவது:
தாய், சேய் நலத்தை மேம்படுத்தி அதன்மூலம் பிறப்பு விகிதத்தையும், குழந்தை இறப்பு விகிதத்தையும் குறைப்பதே குடும்ப நலத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குடும்பநலத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. மக்கள் நல்வாழ்வுக்காக அரசு அளித்து வரும் திட்டங்களும், பயன்களும் அனைவரையும் சென்றடையாமல் தடையாக இருப்பதற்கு காரணம் பெருகி வரும் மக்கள்தொகைதான்.
குடும்பநலத் திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தியதன் விளைவாக தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் 6.4 சதவீதமாகவும், சிசு மரண விகிதம் 17 சதவீதமாகவும், உயர்வரிசை பிறப்பு விகிதம்  7.56 சதவீதமாகவும் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பிறப்பு விகிதம் 11.2 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 5.8  சதவீதமாகவும், சிசுமரண விகிதம் 17 சதவீதமாகவும், உயர் வரிசை பிறப்பு விகிதம் 7.7  சதவீதமாகவும் உள்ளது.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு இன்றியமையாத தேவைகளான உணவு, உடை,  இருப்பிடம்,  கல்வி,  வேலைவாய்ப்பு,  மருத்துவம், பாதுகாப்பு, போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம், சிறந்த சமுதாய சூழ்நிலை ஆகியவை அனைத்து மக்களுக்கும் சரியான விகிதத்தில் கிடைக்கும். எனவே ஒவ்வொருவரும் சிறுகுடும்ப நெறியைப் பின்பற்றி அளவான குடும்பம் அமைத்து வளம் பெற வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம், ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குநர் மு.வசந்தகுமாரி, துணை இயக்குநர் எஸ்.செந்தில்குமார்,  மாநகர நல அலுவலர் டி.என்.சத்தீஸ்குமார், துணை இயக்குநர் (தொழுநோய்) எம்.ஆஷா, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் டேவிட் அப்பாத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT