திருநெல்வேலி

பாளை. கல்லூரியில் அக்.4-இல் ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாய்வுகள் குறித்த தொல்லியல் பன்னாட்டு கருத்தரங்கம்

6th Jul 2019 01:27 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, ஜெர்மனி தமிழ்மரபு அறக்கட்டளை சார்பில், ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாய்வுகள் குறித்த தொல்லியல் பன்னாட்டு கருத்தரங்கம் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் மு. முகமது சாதிக், தமிழ்த் துறை தலைவர் ச. மகாதேவன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியும், ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு உலகெங்கும் இயங்கிவரும் தமிழ்மரபு அறக்கட்டளையும் இணைந்து வரும் அக்டோபர் 4 ஆம் தேதி காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை கல்லூரி உரையரங்கில், தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் பண்பாடு எனும் பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்த உள்ளன.
இதில், ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம், ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி குறித்த ஆய்வுகளும், அதன் தொடர்ச்சியாக இனி மேற்கொள்ளவேண்டிய தொடர்ஆய்வுகளும், முதுமக்கள் தாழிகள், ஆதிச்சநல்லூர் மக்களின் பயன்பாட்டுப் பொருள்கள், காலம், தமிழ் எழுத்துகள் குறித்த பதிவுகள், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்த ஆய்வறிஞர்களின் ஆய்வு முடிவுகள், மக்கள் வரலாறு, ஆய்வு முறையியல், கீழடி, அரிக்கமேடு, அழகன் குளம் தொல்லியல் களங்கள், தொல்லியல் நோக்கில் சங்ககாலம், பழங்கால நாணயங்கள், செப்பேடுகள் வழியே அறியலாகும் தமிழர் பண்பாட்டுத் தரவுகள், அரிய தமிழ்க் கல்வெட்டுகள், தமிழ் எழுத்துகள் வழியே அறியலாகும் தமிழர் பண்பாட்டுச் செய்திகள், தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் வாழ்வியல், தமிழகத் தொல்லியல் தடயங்கள் குறித்த ஆய்வுத் தரவுகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கலாம். 
ஆய்வாளர்கள், ஆய்வுக் கட்டுரைகளை 5 பக்க அளவில் ஒருங்குறியில் தட்டச்சு செய்து வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் s‌o‌u‌n‌d​a‌r​a‌m​a‌h​a‌d‌e‌v​a‌n@‌g​‌ma‌i‌l.​c‌o‌m என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
இக்கருத்தரங்கில் ஜெர்மனி நாட்டிலிருந்து தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் க. சுபாஷிணி, சிந்துவெளி ஆய்வாளரும், புவனேசுவரத்தில் வசிக்கும் பணிநிறைவுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஆர். பாலகிருஷ்ணன்,  இலங்கை, மலேசியா நாடுகளைச் சார்ந்த ஆய்வறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
கருத்தரங்க நாளன்று தமிழ்த் துறை சார்பில் உருவாக்கப்படும் தொல்தமிழ் ஆய்வுக்கோவையை கல்லூரித் தாளாளர் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி வெளியிட்டு தலைமையுரையாற்ற உள்ளார். கருத்தரங்கில், பல்கலைக்கழக கல்லூரிப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தொல்லியல் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT