களக்காட்டில் சாலையை சீரமைக்கக் கோரி திமுகவினர் மற்றும் கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களக்காடு சுபத்ரா பூங்காவில் இருந்து மூங்கிலடி வரை செல்லக்கூடிய சுமார் 3 கி.மீ. சாலை மிகவும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்றதாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.
இச்சாலையை சீரமைக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பேரூராட்சி முன்னாள் தலைவரும், திமுக ஒன்றியச் செயலருமான பி.சி. ராஜன் தலைமையில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கே. செல்வ கருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் ஹ. முகம்மது அலிஜின்னா, நகர இளைஞரணி அமைப்பாளர் ஏசுதாஸ் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் மூங்கிலடி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
பின்னர், அங்கு செயல் அலுவலர் பணியில் இல்லாததால் உதவியாளரிடம் மனுவை அளித்தனர். எங்களது கோரிக்கையை விரைவில் பரிசீலிக்காவிட்டால், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை அமைக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என பி.சி. ராஜன் தெரிவித்தார்.