திருநெல்வேலி

கடையம் வனப் பகுதியில் மூலிகைச் செடிகளைப் பறித்த 4 பேர் கைது: தலா ரூ. 15 ஆயிரம் அபராதம்

6th Jul 2019 01:26 AM

ADVERTISEMENT

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் கடையம் வனப்பகுதியில் மூலிகைச் செடியை பறித்ததாக 4 பேரை வனத் துறையினர் கைது செய்து அவர்களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனர். 
கடையம் வனச்சரகர் நெல்லைநாயகம் தலைமையில், வனவர் முருகசாமி, வனக் காப்பாளர்கள் அய்யாதுரை, பரமசிவன், வனக்காவலர் ரமேஷ் பாபு, வேட்டை தடுப்புக் காவலர்கள் பசுங்கிளி, வேல்சாமி, மனோஜ்குமார், மணிகண்டன் ஆகியோர் கடையம் வனச்சரகத்தில் ஆம்பூர் பீட் வடக்குக் கோரையாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சிலர் உறிஞ்சிச் செடி எனும் மூலிகைச் செடியை பிடுங்கிக் கொண்டிருந்தனராம். வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் கானாவூரைச் சேர்ந்த சுந்தராஜ் மகன் பொன்னையா (45), அற்புதமணி மகன் பாலசிங் அன்புராஜ் (40), ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த பொன்னையா மகன் செல்வம் (32), அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த முத்தையா மகன் கோவிந்தன் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்து, அவர்களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து நெல்லைநாயகம் கூறியது: வனப்பகுதியில் அத்துமீறி நுழைவது, அனுமதியின்றி வனப்பொருள்களை சேகரிப்பது, காடுகளை அழிப்பது, தீ வைப்பது, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது, விறகு மற்றும் மரங்களை வெட்டுவது, மூலிகைச் செடிகளை சேகரிப்பது, மரப் பட்டைகளை உரிப்பது, வனவிலங்குகளை வேட்டையாடுவது போன்ற அனைத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. 
இது வனச்சட்டம், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு (சிவசைலம்) 04634-283165, 94454 68577 என்ற எண்களிலும், புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் அலுவலகத்துக்கு 04634-250594 என்ற தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT