கடமை, பொறுப்பை உணர்ந்து பணி செய்து காவலர்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என தென்மண்டல காவல்துறை தலைவர் கே.பி. சண்முகராஜேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 296 பேருக்கு மணிமுத்தாறு சிறப்புக் காவல் படை 9 ஆம் அணியில் இயங்கி வரும் பயிற்சிப் பள்ளியில் 7 மாதங்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சான்று, பதக்கங்கள் வழங்கி காவல்துறை தென்மண்டல ஐ.ஜி. கே.பி. சண்முக ராஜேஸ்வரன் பேசியது: காவலர்களுக்கு சட்டம் சார்ந்த திறன் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து ஒரு மாதம் செய்முறைப் பயிற்சியில் காவலர்கள் ஈடுபட வேண்டும். பயிற்சியில் கிடைத்த அனுபவங்களை கொண்டு களப் பணி மேற்கொள்ள வேண்டும். காவலர்கள் கடமை, பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். விருப்பு வெறுப்பின்றி பணி செய்ய வேண்டும். காவலர்கள் சிறப்பாக பணி செய்வதன் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
விழாவில், சிறப்புக் காவல்படை 9 ஆம் அணி தலைவர் எஸ். ராஜசேகர், 12 ஆம் அணி தலைவர் ஆனந்தன், துணைக் கண்காணிப்பாளர் முருகேசன், பயிற்சிப் பள்ளி துணை முதல்வர் டி. ராஜேஷ்குமார், பி.பொம்மையாசாமி, கே.சதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.