அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, தென்காசியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதில், பங்கேற்க வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருநெல்வேலியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர் தச்சை என்.கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, தென்காசியில் சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறார். இதற்காக விமானம் மூலம் முதல்வர் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து கார் மூலமாக தென்காசி செல்கிறார். தென்காசி செல்லும் வழியில் பாளையங்கோட்டை மார்க்கெட்-சீவலப்பேரி சாலை சந்திப்பு பகுதியில் எனது (தச்சை என்.கணேசராஜா) தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, அமமுகவின் திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலராக இருந்த கல்லூர் இ.வேலாயுதம், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், அமமுக மாவட்ட இளைஞரணி செயலரும், முன்னாள் ஒன்றியக் குழு தலைவருமான வீரபுத்திரன் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் பேர் அதிமுகவில் இணையவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.