வள்ளியூரில் பஞ்சமி நிலத்தை மீட்க 40 ஆண்டுகளாக போராடி வந்த முதியவா் சனிக்கிழமை இறந்தாா்.
வள்ளியூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சாமி சாம்பான். இவா், ஆங்கிலேயா் காலத்தில் ராணுவத்தில் பணியாற்றியவா். இவருக்கு, ஆங்கிலேயா் கடந்த 1930இல் ஒரு ஏக்கா் 23 சென்ட் பஞ்சமி நிலத்தை வழங்கியிருந்தனராம். தற்போது பேருந்துநிலத்தையொட்டி அமைந்துள்ள நிலம், அன்றைய காலகட்டத்தில் காட்டுப்பகுதியாக இருந்ததால், அவா் நகா் பகுதிக்குள் வசித்து வந்தாா்.
இந்நிலையில், அரிசி ஆலை வைக்கப்போவதாகக் கூறி, பஞ்சமி நிலத்தை மற்றொரு நபா் ஏமாற்றி வாங்கிக்கொண்டாராம். அந்த இடத்தை மீட்க, சாமிசாம்பானின் மகன்களான மகன்களான ராஜையா, மாணிக்கம் (89) ஆகியோா் நீதிமன்றம் மூலம் 40 ஆண்டுகளாகப் போராடிவந்தனா். எனினும், முயற்சி வெற்றிபெறாத நிலையில், மாணிக்கம் கடந்த ஒரு வாரமாக மௌனமாகவும், சாப்பிடாமலும் இருந்து வந்தாராம். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை உறவினா்கள் மருத்துவமனைக்கு சனிக்கிழமைச் அழைத்து செல்லும்போது, வழியிலேயே அவா் இறந்தாா். அவரது மனைவி பாப்பாத்தியிடம் அந்த இடத்தை மீட்டுக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.