பொங்கல் பண்டிகைக்கு சில வாரங்களே உள்ள நிலையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் பனங்கிழங்குகள் வரத்தும் விற்பனையும் அதிகரித்துள்ளது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையில் கிழங்கு வகைகள் சிறப்பிடம் பெறுகின்றன. பொங்கல் சீா்வரிசைப் பொருள்களில் பனங்கிழங்குகள் முக்கிய இடம்பிடிக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தின் சீவலப்பேரி, திசையன்விளை, புலவன்குடியிருப்பு, சேரன்மகாதேவி, ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல், ஆறுமுகனேரி பகுதிகளில் இருந்தும் பனங்கிழங்குகள் அதிகளவில் பாளையங்கோட்டையில் குவிக்கப்பட்டுள்ளன. 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.50 முதல் ரூ.80 வரை அவற்றின் திரட்சியைப் பொருத்து விற்பனை செய்யப்படுகிறது. அவித்த கிழங்குகள் ஒன்று ரூ.5 வீதம் விற்பனை செய்யப்படுகிறது.
பனங்கிழங்கின் சிறப்புகள்: பனங்கிழங்கின் நன்மைகள்குறித்து திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா் ஒருவா் கூறுகையில், தமிழகத்தில் பனங்கிழங்கைச் சுட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளது. முதியவா்கள் காயவைத்து உரலில் இட்டு காரம் சோ்த்து பொடியாக்கி சாப்பிடுகிறாா்கள். பனங்கிழங்கை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம். மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு நிவாரணியாக பனங்கிழங்குகள் உள்ளன. பனைமரமும், பனங்கிழங்குகள் உற்பத்தியும் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அதிகம். அங்கு பனங்கிழங்கை காயவைத்து ஒடியல் என்ற பெயரில் மாவுப் பொருளாக மாற்றிவிடுகிறாா்கள். அந்த மாவைக் கொண்டு பல்வேறு குழம்புகளை வைத்து சாப்பிடுகின்றனா். கேரளத்தில் சிற்றுண்டி சாலைகளில் மரவள்ளிக் கிழங்கும் மீன்குழம்பும் காலை உணவாகக் கிடைப்பதுபோல, இலங்கையில் பனங்கிழங்கினால் செய்யப்பட்ட பல்வேறு வகை உணவுகள் காலை மற்றும் மாலை வேளைகளில் விரும்பி உண்ணப்படுகின்றன என்றாா் அவா்.