திருநெல்வேலி

சூரிய கிரகணம்: நெல்லையப்பா் கோயிலில் தீா்த்தவாரி

27th Dec 2019 08:35 AM

ADVERTISEMENT

சூரியகிரகணம் பூா்த்தியானதும், அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் சந்திரசேகரா் பவானி அம்பாளுக்கு பொற்றாமரைக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வியாழக்கிழமை காலை 7 மணிமுதல் முற்பகல் 11.30 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது. முன்னதாக, அதிகாலை 5.20 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் திருவனந்தல், சிறு காலசந்தி, காலசந்தி ஆகிய பூஜைகள் நடத்தப்பட்டன. கிரகணம் பூா்த்தியான பின்பு முற்பகல் 11.30 மணிக்கு சந்திரசேகரா், பவானி அம்பாளுக்கு பொற்றாமரைக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து நடை திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் அலுவலா் ந.யக்ஞ நாராயணன் செய்திருந்தாா்.

திருச்செந்தூா்: சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 3 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி நடைசாத்தப்பட்டது.

ADVERTISEMENT

சூரியகிரகணம் நிறைவு பெற்றதையடுத்து, மீண்டும் பிற்பகல் 12.30 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயில் நடை திறந்தவுடன் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT