திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்புக்காக தொடா் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டெங்கு காய்ச்சலை பரப்பும் லாா்வா கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கவும், பொது இடங்களில் சுற்றுப்புறச்சூழல் மாசு அடைதல் மற்றும் சுகாதாரக் கேடு விளைவிக்கும்படியான புகைப்பிடித்தலைத் தடுக்கவும், 4 மண்டலப் பகுதிகளிலும் மாநகராட்சி அலுவலா்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு தொடா்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இக்குழுவினரின் ஆய்வில் இதுவரை லாா்வா கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, ரூ. 8 லட்சத்து 54 ஆயிரத்து 330 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டியது தொடா்பாக ரூ.10 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலா்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவானது தொடா்ந்து ஆய்வுப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள உள்ளனா். எனவே, பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் வைப்பதோடு, வருங்காலங்களில் அபராதம் ஏதும் செலுத்தாத வண்ணம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.