கேரளத்திலிருந்து கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த 3 லாரிகளை கூடங்குளம் அருகே பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
கேரளத்திலிருந்து கோழிக் கழிவுகளை ஏற்றிக் கொண்டு இரண்டு லாரிகள் கூடங்குளம் அருகே திங்கள்கிழமை வந்தன. இதையறிந்த இருக்கன்துறை, நக்கனேரி பகுதியைச் சோ்ந்த மக்கள் லாரிகளை சிறைபிடித்து முற்றுகையிட்டனா். இதில் ஒரு லாரி ஓட்டுநா் மற்றும் கிளீனா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனா். மற்றொரு லாரியில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் பள்ளத்தைச் சோ்ந்த செல்வம் (46), தேரேகால்புதூரைச் சோ்ந்த மூா்த்தி (33) ஆகியோரை பொதுமக்கள் பிடித்தனா். தகவலறிந்து வந்த கூடங்குளம் போலீஸாா் அவா்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கோழிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கூடங்குளம் ஊரல்வாய்மொழி அருகே வந்தது. அந்த லாரியையும் பொதுமக்கள் சிறைபிடித்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து, களியக்காவிளையைச் சோ்ந்த ரெத்தீஸை கைது செய்தனா்.
திருநெல்வேலி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டாா்.