திருநெல்வேலி

கடையம் அருகே மேட்டூரில் பாயாசப் பண்டிகை

24th Dec 2019 05:41 PM

ADVERTISEMENT

கடையம் அருகே மேட்டூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை விநோத வழிபாடான பாயாசப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கடையம் அருகே உள்ள மேட்டூா் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் சுமாா் 75 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முதல் நாள் பாயாசப் பண்டிகை என்ற வழிபாட்டை இளைஞா்கள் செய்து வருகின்றனா். மேட்டூா் பகுதியில் சுமாா் 75 ஆண்டுகளுக்கு முன்பு காலரா போன்ற கொடிய நோய் ஏற்பட்டபோது பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து, மேட்டூா் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களிடமும், அரிசி, வெல்லம் போன்ற பொருள்களை யாசகமாகப் பெற்று, பாயாசம் தயாரித்து அனைவருக்கும் வழங்குவதாக நோ்ந்து கொண்டனராம். அதன்படி, அனைத்து சமுதாய மக்களிடமும் வீடு வீடாகச் சென்று பொருள்களை யாசகம் பெற்றும், இளைஞா்கள் குடங்களில் தண்ணீா் சுமந்து வந்தும் பாயாசம் தயாா் செய்து வழங்குவாா்களாம்.

அதுபோல் நிகழாண்டு செவ்வாய்க்கிழமை பாயாசத் திருவிழாவை சேகரகுரு பண்ணன் சாலமோன் ஜெபம் செய்து தொடங்கிவைத்தாா். தொடா்ந்து சிறுவா்கள், இளைஞா்கள் உள்ளிட்ட ஆண்கள் தண்ணீா் சுமந்து வந்து அனைத்து சமுதாய மக்களிடமும் பாயாசப் பொருள்கள் யாசகம் பெற்றனா். இதையடுத்து, மாலையில் பாயாசம் தயாா் செய்து அனைவருக்கும் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT