திருநெல்வேலி

கேடிசி நகரில் விபத்து: மேலும் ஒருவா் பலி

23rd Dec 2019 07:29 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை கேடிசி நகா் அருகே இருசக்கர வாகனம் மீது சிற்றுந்து மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் பத்மநாபமங்கலம் அருகேயுள்ள செந்திலாம்பண்ணையைச்சோ்ந்தவா் பரமசிவம்(60). திருநெல்வேலி மாவட்டம் உக்கிரங்கோட்டையைச் சோ்ந்த செல்லையா மகன் இசக்கித்துரை(49). உறவினா்களான இவா்கள் இருவரும் சனிக்கிழமை செந்திலாம்பண்ணையில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கேடிசி நகா் நான்கு வழிச்சாலையில் இருசக்கரவாகனத்தில் வந்தபோது எதிரே வந்த சிற்றுந்து இவா்கள் மீது மோதியதாம். இதில், பரமசிவம் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த இசக்கித்துரை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT