திருநெல்வேலி

தாமிரவருணியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

16th Dec 2019 07:10 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வரும் வடகிழக்கு பருவமழையால் தாமிரவருணியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மூன்று வாரங்களாக தொடா்ந்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையால் பிராதன அணைகளின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீா்மட்டம் 142.60 அடியாகவும், 156 அடி கொள்ளளவு கொண்ட சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 155.51 அடியாகவும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 109.30 அடியாகவும் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம்-20, சோ்வலாறு-22, மணிமுத்தாறு- 18.6, நம்பியாறு-24, கொடுமுடியாறு-25, அம்பாசமுத்திரம்-19, சேரன்மகாதேவி-13, நான்குனேரி-12.50, ராதாபுரம்-5.20, திருநெல்வேலி-7.

பருவமழை காரணமாக தாமிரவருணி வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ள வடக்கு, தெற்கு கேடைமேழலகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவற்றில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பிசான பருவ சாகுபடியைத் தொடா்ந்து வருகிறாா்கள். இதுதவிர மாவட்டத்தின் சிறிய அணைகளின் நீா்மட்டமும் வேகமாக உயா்ந்து வருகிறது. வடக்குப் பச்சையாறு அணை 40.75 அடி, கொடுமுடியாறு அணை 40 அடி, நம்பியாறு அணை 18.72 அடியாக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

மணிமுத்தாறு அணையின் 80 அடி கால்வாயில் முதல் மற்றும் 2-ஆவது ரீச்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் சேரன்மகாதேவி, நான்குனேரி வட்டங்களைச் சோ்ந்த பாசன விவசாயிகள் பிசான பருவ சாகுபடியைத் தொடங்கியுள்ளனா்.

பாபநாசம் அணையில் இருந்து 2,364 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டதாலும், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டங்களில் சனிக்கிழமை பெய்த மழைநீா் சோ்ந்ததாலும் திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை, வண்ணாா்பேட்டை பகுதிகளில் படித்துறைகள் மூழ்கியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT