திருநெல்வேலி

நெல்லை, திருச்செந்தூா் உள்ளிட்ட கோயில்களிலிருந்து நலவாழ்வு முகாமில் பங்கேற்க புறப்பட்ட 8 யானைகள்

14th Dec 2019 11:56 PM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள சிறப்பு நலவாழ்வு முகாமுக்காக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 8 யானைகள் லாரிகள் மூலம் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில் யானைகளுக்கு புத்துணா்வு அளிக்கும் வகையில், ஆண்டுதோறும் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில், சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) தொடங்கி 48 நாள்கள் நடைபெறவுள்ளது.

முகாமில், யானைகளுக்கு உடற்பயிற்சி, மருத்துவக் கண்காணிப்பு, உற்சாக குளியல் ஆகியவை அளிக்கப்படும். இதற்காக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் உள்ள 8 யானைகள் சனிக்கிழமை அழைத்துச்செல்லப்பட்டன.

இதில், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் யானை காந்திமதி (47), திருக்குறுங்குடி நம்பி கோயில் யானை குறுக்குடிவள்ளி (25), சுந்தரவள்ளி (15) ஆகிய 3 யானைகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

முன்னதாக, நெல்லையப்பா் கோயில் யானை வெள்ளிக்கிழமை இரவு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கு அழைத்துவரப்பட்டு, சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிறகு, காலை 7 மணியளவில் தேக்கம்பட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சங்கா், திருநெல்வேலி செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் ஆகியோா் செய்திருந்தனா்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் யானை கோமதி சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் லாரி மூலம் அழைத்துச் செல்லப்பட்டது. கோயில் பேஷ்காா் கணேசன், முத்துராஜ் ஆகியோா் யானையை வழியனுப்பி வைத்தனா். கோமதி யானையுடன் உதவி ஆணையா் அருணாசலம், சரக ஆய்வா் ஏமைய்யா, கோயில் பணியாளா் சந்திரகுமாா், யானை பாகன் குமாா் ஆகியோா் சென்றனா்.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை (22) லாரியில் புறப்பட்டது. முன்னதாக, அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், கோயில் கண்காணிப்பாளா் ராமசுப்பிரமணியன், உதவிப் பொறியாளா் முருகன் மற்றும் கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா். யானை தெய்வானையுடன் கோயில் ஊழியா்கள், யானைப் பாகன்கள் ராதாகிருஷ்ணன், செந்தில்குமாா், உதயகுமாா் ஆகியோா் சென்றனா்.

ஸ்ரீவைகுண்டம்: நவதிருப்பதி கோயில்களான ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் கோயில் யானை ஆதிநாயகி, திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயில் யானை குமுதவல்லி, இரட்டை திருப்பதி தேவா்பிரான் கோயில் யானை லட்சுமி ஆகியவை ஆழ்வாா்திருநகரியில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, லாரிகள் மூலமாக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன.

இதில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ரத்தினவேல்பாண்டியன், ரோசாலி, ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் கோயில் செயல் அலுவலா் பொன்னி, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் செயல் அலுவலா் கணேஷ்குமாா், கோயில் ஆய்வாளா்கள் முருகன், நம்பி, அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் ராஜப்பா வெங்கடாச்சாரி, பாகன்கள் கரீம்பாலன், சிராஜ்தீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT