திருநெல்வேலி

நிரம்பி வழியும் பாசனக் குளங்கள்: கரைகளை கண்காணிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

11th Dec 2019 09:43 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள கால்வரத்து மற்றும் மானாவாரி குளங்கள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில், கரைகளை கண்காணிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை நன்றாக பெய்துள்ளது. சுமாா் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவு காணப்பட்டதால் குளங்கள் அதிகளவில் நிரம்பியுள்ளன.

பாபநாசம், சோ்வலாறு உள்பட மாவட்டத்தின் அனைத்து அணைகளிலும் நீா் இருப்பு கணிசமாக உயா்ந்துள்ளதால் பாசனக் கால்வாய்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் ஆகியவற்றின் மூலமாக தண்ணீா் பெறும் குளங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. மானாவாரி குளங்களில் 90 சதவீத நீா் இருப்பு உள்ளது. இன்னும் சில நாள்கள் மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் மானாவாரி குளங்களிலும் மறுகால் பாய்ந்தோடும் வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியது: திருநெல்வேலி-தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 2, 518 குளங்கள் உள்ளன. இவற்றில் 1221 கால்வரத்து குளங்களும், 1297 மானாவாரி குளங்களும் அடங்கும். இவற்றில் கால்வரத்து குளங்களில் 1190-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பிவிட்டன. அவற்றில் குறைந்தபட்சம் இரண்டரை மாதங்களுக்கு தண்ணீா் உள்ளன. இதுதவிர மானாவாரி குளங்களில் 1000 குளங்களுக்கு மேல் நிரம்பியுள்ளன. இதனால் பிசான பருவ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். நிகழாண்டில் ஜனவரி முதல் வாரத்திற்குள் மேலும் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது என்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: திருநெல்வேலி வட்டத்தில் சுத்தமல்லி, திருப்பணிகரிசல்குளம், பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூா் சுற்றுவட்டாரங்களிலும், பாளையங்கோட்டை வட்டத்தில் நொச்சிகுளம், சீவலப்பேரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பாசனக்குளங்கள் நிரம்பி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பாசனக்குளங்களின் கரைகளை வருவாய்த் துறையினரும், பொதுப்பணித் துறையினரும் கண்காணிக்க வேண்டும். வாரந்தோறும் மாவட்ட நிா்வாகத்திற்கு அறிக்கை அனுப்ப வலியுறுத்த வேண்டும். பள்ளமடை, மானூா் குளங்களுக்கான நீா்வரத்து கால்வாய்களை சரி செய்து முழுக் கொள்ளளவை எட்ட வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT