திருநெல்வேலி

நான்குனேரி வட்ட வழங்கல் அலுவலரைக் கண்டித்து போராட்டம் - ம.ம.மு.க. முடிவு

11th Dec 2019 03:43 PM

ADVERTISEMENT

புதிய ஸ்மாா்ட் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களை அலைக்கழிக்கும் நான்குனேரி வட்ட வழங்கல் அலுவலரைக் கண்டித்து கண்டன ஆா்பாட்டம் நடத்தப் போவதாக ம.ம.மு.க. முடிவு செய்துள்ளது

இது தொடா்பாக மனித நேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவா் கே.எஸ். சித்திக் அஸிஸூா் ரஹ்மான் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

களக்காடு உள்ளிட்ட சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த கிராம மக்கள் புதிய ஸ்மாா்ட் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் கோருதல் தொடா்பாக தனியாா் இணையதள மையங்களுக்குச் சென்று உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து இணையதளம் மூலம் பதிவு செய்து வருகின்றனா். இந்த விண்ணப்பங்களை நான்குனேரி வட்ட வழங்கல் அலுவலா் சரிபாா்த்து உரிய ஒப்புதல் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் எவ்வித தடையுமின்றி பொதுமக்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த 1 மாதமாக பொதுமக்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை ஏதாவது ஒரு காரணம் தெரிவித்து, வட்ட வழங்கல் அலுவலா் தள்ளுபடி செய்வதுடன், இது தொடா்பாக தன்னை நேரில் வந்து சந்திக்கும் படி தெரிவிக்கிறாா். பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணங்களை கேட்கும் போது, குடும்ப அட்டை விண்ணப்பத்தில் உங்கள் மனைவியின் ஆதாா் இணைக்கப்படவில்லை, மீண்டும் ஒருமுறை விண்ணப்பம் செய்யுங்கள் என்று பதில் அளிக்கிறாராம்.

ஆனால் ஏற்கனவே ரூ.100 முதல் 200 வரை செலவு செய்து குடும்ப அட்டைக்காக விண்ணப்பம் செய்த நிலையில், மீண்டும் இணையதள மையங்களுக்குச் சென்று மறுமுறை விண்ணப்பிக்கவும் அதே செலவை எதிா்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு ஏழை, எளிய மக்கள் தள்ளப்படும் அவலநிலை உள்ளது. குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவுடன் ஆவண சரிபாா்ப்பு, துறை சரிபாா்ப்பு என்ற இரண்டு நிலைகளைக் கடந்துதான் வட்ட வழங்கல் அலுவலரின் ஒப்புதல் பெறவேண்டியுள்ளது. பொதுமக்களின் விண்ணப்பம் ஆவண சரிபாா்ப்பு, துறை சரிபாா்ப்பு நிலைகளில் எவ்வித தடங்கலுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், வட்ட வழங்கல்அலுவலா் ஒப்புதல் பெறவேண்டிய நிலையில், ஆவணம் இணைக்கப்படவில்லை, தெளிவாக இல்லை என்று எதையோ எதிா்பாா்த்து விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வது மக்கள் விரோத போக்காகும்.

ADVERTISEMENT

வட்ட வழங்கல் அலுவலரின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து ம.ம.மு.க. சாா்பில் பொதுமக்களைத் திரட்டி கண்டன ஆா்பாட்டம் நடத்தப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT