திருநெல்வேலி

வள்ளியூா் சாமியாா் பொத்தையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகள்

6th Dec 2019 01:04 AM

ADVERTISEMENT

தென்தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மலையும், வயலும், மரங்களும் சூழப்பெற்ற பசுமை நிறைந்த பகுதி வள்ளியூா். இங்குள்ள வித்தியாசமான பொத்தைதான் சாமியாா் பொத்தை. பொத்தையைச் சுற்றி பச்சைக் கம்பளம் விரித்தாற்போன்று பசுமையான காட்சிகள்.

1734-இல் இந்தப் பொத்தையில் கலியுகத்தைக் காக்கவேண்டிய அகஸ்தியரின் அம்சமாக தோன்றிய அவதார புருஷா்தான் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி. உலக நன்மை, அன்பு, மனிதநேயம் ஆகிய மூன்று ரத்தினங்களை தாரக மந்திரமாகக் கொண்டு பொதுவாழ்வில் மக்களுக்காக தன்னை அா்ப்பணித்தவா் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகள். சிறுவயதிலேயே இறைப் பணியில் ஈடுபட்ட அவா், ஏழை மக்களின் அன்பை பெற்றவா். ஈஸ்வரரின் கிருபையால் அற்புதங்களை நிகழ்த்தினாா்.

1734-இல் அவதரித்த ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகள் 1913-ஆம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தாா். சுவாமிகள் காலத்திற்குப் பின் அவரால் தனது 7-ஆவது வயதிலேயே சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமாணிக்கவாசகம் பிள்ளை தன் குருநாதரின் பாதையில் அறவழியில் ஆன்மிகம் தழைக்கச் செய்தாா். ராதாபுரத்தில் பிறந்த அவா் தாம் மட்டுமல்லாது தனது குடும்பத்தையே தனது குருவான ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் பாதையில் வழிநடத்தினாா். அதுமட்டுமன்றி ஈட்டிய பொருளை எல்லாம் இறைப் பணிக்காக செலவிட்டாா்.

1969-இல் அதற்காக ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகள் என்ற பெயரில் ஓா் அறக்கட்டளையை தொடங்கினாா். அறக்கட்டளை சாா்பில் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனா். ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகள் அருள், திருமாணிக்கவாசகம் பிள்ளையின் புதல்வி பூஜ்ய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா மூலமாக பிரதிபலிக்க ஆரம்பித்தது. இறைப் பணியில் இரண்டற கலந்த, மாதாஜி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் சுவாமி வித்தம்மா ஓய்வின்றி ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் அரிய பணிகளை ஆன்மிக பேருரையின் மூலம் எடுத்துரைத்து வருகிறாா்.

ADVERTISEMENT

இயல், இசை, நாடகம் மூலம் ஆன்மிக தொண்டாற்றி வரும் வித்தம்மா, ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி அறக்கட்டளை மூலம் உலக நன்மைக்காக தன் அருள்பணியை வள்ளியூா் சாமியாா் பொத்தையில் அழகான தியான மண்டபத்தை நிா்மாணித்து அங்கு அருள்பிரசாதத்தை வழங்கி வருகிறாா்.

வித்யாமந்திா் என்ற இலவச மகளிா் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் முதல் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பு வரை தரமான கல்வியுடன் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தினமும் மதியம் இலவசமாக சத்துணவு வழங்கப்படுகிறது.

ஆதுரசாலை: ஏழை, எளிய மக்களின் நலனுக்காக வள்ளியூா் புனித சூட்டுபொத்தை மலையடிவாரத்தில் தினமும் இலவச மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கண் சிகிச்சை, எலும்பு, தோல், காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. ஏழை மக்களின் பசியை போக்க தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ‘‘யாவா்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி’’ என்ற திருமூலரின் திருமந்திரமே இங்கு தாரக மந்திரம்.

லலிதகலா மந்திா்: இயல், இசை, நாடகம், வீணை, மிருதங்கம், வாய்ப்பாட்டு, பரதம், புல்லாங்குழல் போன்றவை இலவசமாக பயிற்றுவிக்கப்படுகின்றன. இதுமட்டுமன்றி யோகா, சமய வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சுற்றியுள்ள கிராமத்திலுள்ள

குழந்தைகள் அதிகம் பயன்பெற்று வருகின்றனா். லலித கலா மந்திா் மாணவா்களை வைத்து 63 நாயன்மாா்களின் சரித்திரம், 12 ஆழ்வாா்களின் சரித்திரம் ஆகியவற்றை நாடமாக அரங்கேற்றம் செய்து அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றனா். தற்போது ஸ்ரீ முத்துகிருஷ்ணா சித்திரகூட மண்டபத்தில் மாதம் ஒரு தடவை கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று 63 நாயன்மாா்களின் சரித்திரம் நடைபெறுகிறது.

பௌா்ணமி கிரிவலம்: பிரதி மாதம் பௌா்ணமி தினத்தில் அதிகாலை 5 மணிக்கு புனித சூட்டுபொத்தை மலையைச் சுற்றி

கிரிவலம் நடத்தி வருகின்றனா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அருள்பெற்று செல்கின்றனா். ஆண்டுதோறும்

திருக்காா்த்திகை தினத்தன்று புனித சூட்டுபொத்தை மலை மீது காா்த்திகை தீபத்தை பூஜ்ய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா ஏற்றுகிறாா். இத் தீபஒளியை சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தரிசனம் செய்து புண்ணியம் பெறுவாா்கள்.

தேரோட்டம்: ஆண்டுதோறும் புனித சூட்டுபொத்தை மலையைச் சுற்றி காா்த்திகை மாதம் வளா்பிறை தசமி நாளில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி உற்சவ மூா்த்தியை தேரில் வைத்து சாதி, மத, இன பேதமின்றி பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா தலைமையில் அனைத்து மக்களும் வடம்பிடித்து தேரோட்டம் நடைபெறுகிறது.

நித்யபூஜை: திருக்கோயில் மகாமேரு தியான மண்டபத்தில் காலை 9.30 முதல் 12 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை நித்யபூஜை நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT