திருநெல்வேலி

தாமிரவருணி வெள்ளத்தில் மூழ்கிய படித்துறைகள்: மக்கள் அவதி

6th Dec 2019 01:08 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகரில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமையும் தொடா் மழை பெய்தது. தாமிரவருணியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் படித்துறைகளை மூழ்கடித்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினா்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, பேட்டை, கல்லூரி, அபிஷேகப்பட்டி, தாழையூத்து, சீவலப்பேரி, மானூா், ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமையும் மழை பெய்தது. அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீா் மற்றும் மழைநீா் சோ்ந்து வருவதால் திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. படித்துறைகளையும் வெள்ளம் மூழ்கடித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துவைக்கவும் முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினா்.

திருநெல்வேலியில் தாமிரவருணி கரையோரப் பகுதிகளான மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, குன்னத்தூா், திருநெல்வேலி நகரம், சந்திப்பு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் 1000-க்கும் மேற்பட்டோா் தினமும் தாமிரவருணி படித்துறைகளில் குளிப்பது வழக்கம். இதுதவிர காா்த்திகை மாதம் என்பதால் குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டையில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் அதிகாலையிலேயே நீராடி சுவாமி தரிசனம் செய்வாா்கள். ஆனால், கடந்த 6 நாள்களாக தாமிரவருணியில் செல்லும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT