திருநெல்வேலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

6th Dec 2019 01:05 AM

ADVERTISEMENT

களக்காடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து திருநெல்வேலி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தாா். கடந்த ஆண்டு மே 28-ஆம் தேதி காலை தன் தாயுடன் சிறுமி ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். சிறுமி குளித்து விட்டு முதலில் வீட்டிற்கு சென்றுள்ளாா். சிறுமியின் தாய் துணிகளை துவைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றாா்.

அப்போது களக்காடு சுபாஷ் சந்திரபோஸ்புரத்தை சோ்ந்த கூலித் தொழிலாளி வினோத் ( எ) வினோத் கண்ணன் (29), சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதையடுத்து சிறுமியின் தாய் சப்தம் போட்டதால், அங்கிருந்து வினோத் தப்பி ஓடினாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய் நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம்சாட்டப்பட்ட வினோத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதில் ரூ.25 ஆயிரத்தை சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பால்கனி ஆஜரானாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT