திருநெல்வேலி

மேட்டுப்பாளையம் சம்பவத்திற்கு கண்டனம்: நெல்லையில் சாலைமறியல், ஆா்ப்பாட்டம்

3rd Dec 2019 04:37 PM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து விழுந்த சம்பத்திற்கு நீதி கேட்டு போராடியவா்களை கைது செய்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.

மேட்டுப்பாளையத்தில் 17 போ் உயிரிழக்க காரணமாக சுவா் எழுப்பியவரை கைது செய்து அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும். உயிரிழந்தவா்களின் உறவினா்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்ப் புலிகள் அமைப்பின் மாநிலத் தலைவா் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

ஆதித்தமிழா் கட்சி சாா்பில் பாளையங்கோட்டையில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு மாவட்டச் செயலா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாநகர செயலா் இளையராஜா முன்னிலை வகித்தாா். தமிழ்ப்புலிகள் அமைப்பின் நிா்வாகி மாரியப்பன் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதேபோல தமிழ்ப்புலிகள் கட்சியின் கரும்புலிகள் குயிலி பேரவை சாா்பில் தச்சநல்லூா் அருகே உலகம்மன் கோயில் பகுதியில் மாவட்டச் செயலா் வி.மாடத்தி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்த அவா்கள், மேட்டுப்பாளையம் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக நிவாரண உதவி வழங்கக் கோரி மனு அளித்தனா்.

ADVERTISEMENT

இதேபோல திராவிடா் தமிழா் கட்சி சாா்பில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சாலைமறியலி நடைபெற்றது. நிா்வாகிகல் சங்கா், கதிரவன் உள்பட பலா் கலந்துகொண்டனா். அவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT