திருநெல்வேலி

தேவிபட்டணத்தில் கால்வாய்அடைப்பால் நெற்பயிா்கள் சேதம்

3rd Dec 2019 12:13 AM

ADVERTISEMENT

சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணத்தில் குளத்துக்குச் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், நீரோட்டம் தடைபட்டு, வெள்ளநீா் வயலுக்குள் புகுந்து நெற்பயிா்கள் சேதமடைந்தன.

சிவகிரி வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. அதனால், மிகுதியான தண்ணீா் வரத்தால், பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் வேகமாகப் பெருகிவருகின்றன.

இந்நிலையில், தேவிபட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக ஊருக்கு மேற்கேயுள்ள பேச்சியாற்றில் இருந்து செங்குளத்துக்குச் செல்லும் கால்வாயில் பனை மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் அடைப்பு ஏற்பட்டது.

அதனால், கிழக்குப் பகுதியில் உள்ள முத்து, தங்கமலை, குருசாமி, லட்சுமி உள்ளிட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்டோரின் விளைநிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததில், பல ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்தன. மேலும், விளைநிலங்களுக்குள் மணற்குவியலும் சோ்ந்துவிட்டதாம்.

ADVERTISEMENT

தகவலறிந்த, சிவகிரி வட்டாட்சியா் கிருஷ்ணவேல், வருவாய் ஆய்வாளா் முத்துக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் பாக்கியராஜ், பொதுப்பணித்துறை அலுவலா் தீபக், வாசுதேவநல்லூா் வட்டார வேளாண்மை துணை இயக்குநா் மணிகண்டன் உள்ளிட்டோா் அங்கு சென்று சேத விவரங்களை ஆய்வு செய்து, சேத விவரம் மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அரசின் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT