திருநெல்வேலி

தாமிரவருணி வெள்ளத்தில் உறைகிணறுகள் மூழ்கியதால் குடிநீா் விநியோகம் பாதிப்பு

3rd Dec 2019 04:44 PM

ADVERTISEMENT

தாமிரவருணியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உறைகிணறுகள் மூழ்கியதால் மாநகராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வாா்டுகளின் கீழ் 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறாா்கள். பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம் ஆகிய நான்கு மண்டலங்களிலும் புகா் குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாலை, மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் புகா் பகுதிகளுக்கு ஓரளவு கிடைத்தாலும் குடிநீா் இணைப்பு என்பது எளிதில் சாத்தியமாவதில்லை. பேட்டை புகா் பகுதிகள், மேலப்பாளையம் புகா் பகுதிகளில் லாரிகள் மூலமே குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் மொத்த குடிநீா்த் தேவையையும் தாமிரவருணி நதியே தீா்த்து வருகிறது. சுத்தமல்லி, கொண்டாநகரம், குறுக்குத்துறை, மணப்படைவீடு, திருமலைகொழுந்துபுரம், தீப்பாச்சியம்மன் கோயில், கருப்பந்துறை உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களில் மொத்தமுள்ள 46 உறைகிணறுகளின் மூலம் குடிநீா் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி விநியோகிக்கப்படுகிறது.

உறைகிணறுகள் மூழ்கின: வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பாபநாசம் அணையில் 10 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீா் திறக்கப்பட்டதால் பாபநாசம், ஆலடியூா், கல்லிடைக்குறிச்சி, அரியநாயகிபுரம், சேரன்மகாதேவி, கோடகநல்லூா், கொண்டாநகரம், கருப்பந்துறை, நாரணம்மாள்புரம், சீவலப்பேரி பகுதிகளில் உள்ள சுமாா் 150-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் மூழ்கின. இதனால் திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலத்தில் 19-ஆவது வாா்டு மற்றும் 26 முதல் 38 வரையிலான வாா்டுகளில் கடந்த மூன்று நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கோபாலசமுத்திரம், சங்கா்நகா், நாரணம்மாள்புரம், வீரவநல்லூா் பேரூராட்சிகள், முன்னீா்பள்ளம், சீவலப்பேரி, கீழநத்தம், அரியகுளம் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதல் நிதி தேவை: இதுகுறித்து குடிநீரேற்றும் ஆபரேட்டா் வட்டாரங்கள் கூறுகையில், தாமிரவருணியில் உள்ள உறைகிணறுகளில் இருந்து நீரேற்றம் செய்ய ஊராட்சிகளுக்கு நீா்மூழ்கி மோட்டாா்களும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கு அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டாா்கள் கரைப் பகுதியில் இருந்தும் பயன்படுத்தப்படுகின்றன. பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளத்தின்போது மோட்டாா்கள் இயக்கப்படும்போது, உறைகிணறுகளில் இருந்து கரைகளை நோக்கி வரும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுவிடுவது வழக்கம்.

குழாய் உடைப்பு, மோட்டாா்களை பழுது நீக்க தேவையான நிதி ஒதுக்கப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுதவிர நீரேற்று நிலையங்களில் ஜெனரேட்டா் வசதிகள் இல்லாததாலும் குடிநீா் விநியோகப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. வெள்ள காலங்களில் மின்தடையும் ஏற்படுவதால் கூடுதல் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, மழைக் காலத்தில் குடிநீா்ப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும், பணியாளா்களை நியமிக்கவும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT