விநாயகர் சதுர்த்தியின்போது சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகர் சிலைகளை நீரில் கரைக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டியது மக்களாகிய நமது கடமை. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
எனவே, களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும், எவ்வித ரசாயனக் கலவையும் இல்லாத கிழங்கு மாவு மற்றும் மர வள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும். நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களை உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தினால் தேர்வு செய்யப்பட்ட நீர் நிலைகளின் விவரங்கள் https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின்படி சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும். இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.