திருநெல்வேலி

வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

30th Aug 2019 10:19 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட அனைத்து வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பெருமாள் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் போலி நகைகளை தயாரித்து வங்கிகளில் அடகு வைக்கும் மோசடி கும்பல்களின் செயல்கள் அதிகரித்துள்ளன. நகைகளை மதிப்பீட்டாளர்கள் பரிசோதனை செய்யும்போது மேற்புரம் தங்கமாக உள்ளது. உள்ளே இருக்கும் உலோகத்தைக் கண்டுபிடிக்க இயலாது. 
போலி நகைகளைத் துண்டாக்கினால் மட்டுமே கண்டுபிடிக்க இயலும். வங்கிகளில் இது நடைமுறைக்குச் சாத்தியப்படாது. போலி நகைகள் அடகு வைக்கப்பட்டு ஓராண்டுக்கு பின்னரும் நகை திருப்பப்படாத நிலையில் தீவிர பரிசோதனைக்குப் பிறகு போலி என்பது கண்டுபிடிக்கப்படும்போது, வாடிக்கையாளர்கள் பொறுப்பேற்காத நிலையில் வங்கி நிர்வாகம் நகைமதிப்பீட்டாளர்களே பொறுப்பு என குற்றஞ்சாட்டி பணத்தை நகை மதிப்பீட்டாளர்களிடம் வசூலித்து விடுகிறார்கள். 
தவறு செய்யாமல் அவமானத்திற்கு அஞ்சி, நகைமதிப்பீட்டாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உருவாகிறது. 
போலி நகைகள் அடகுவைத்தோர் கடன்கள் மீது வங்கிகளில் வழங்கிய பிற வாராக்கடன்களை வசூல் செய்வதற்கான நடைமுறைகள் போன்று சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போலி நகை அடகு வைப்போர் மட்டுமன்றி அவற்றை தயாரித்து கொடுப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT