பாளையங்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மூட்டா மற்றும் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மூட்டா 3-ஆவது மண்டலத் தலைவர் நசீர் அகமது, 4-ஆவது மண்டலத் தலைவர் ஐசக் அருள்தாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (அய்பெக்டோ) தேசிய செயலர் எஸ். சுப்பாராஜூ தொடக்க உரையாற்றினார்.
மூட்டா தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர். முருகேசன், மூன்றாவது மண்டலச் செயலர் கெய்ஸ் தாசன், நான்காவது மண்டலச் செயலர் கலைவாணன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மூட்டா பொதுச் செயலர் மு. நாகராஜன் நிறைவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, 1.1.2006-க்குப் பிறகு பணியில் சேர்ந்த இளைய ஆசிரியர்களுக்கான பணி மேம்பாடு அனைவருக்கும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். முனைவர் பட்டத்திற்கான ஊக்க ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். இளையோர்-மூத்தோர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கல்லூரியில் மூன்றாண்டுகள் இணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூன்றாவது மண்டலப் பொருளாளர் சிவஞானம் நன்றி கூறினார்.