திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 30) தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த அணையின் மொத்த கொள்ளளவு 52.50 அடி. அணையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 20 அடி தண்ணீர் இருந்தது. இந்நிலையில், ஆக. 6 முதல் 10 ஆம் தேதி வரை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால், ஆக. 11ஆம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.
அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பேரில், ஆக. 30 ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீரை திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அணையிலிருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த அணையின் மூலம் நான்குனேரி, ராதாபுரம்வட்டத்தில் உள்ள 44 குளங்கள் நிரம்பி, 5,780.91 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.