தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் ராதாபுரம் வட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பணகுடி, பரிவிரிசூரியன், தண்டையார்குளம், வேப்பிலான்குளம், தெற்குவள்ளியூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற இம்முகாம்களில் தனி வட்டாட்சியர் ராஜசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசக பெருமாள், வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன், வட்டார புள்ளியியல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், மண்டலத் துணை வட்டாட்சியர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அலி ஆகியோர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். மொத்தம் 416 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில், பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மு.சங்கர் தலைமையில் அப்பகுதி மக்கள் அளித்த மனு: பணகுடி அருகே உள்ள தளவாய்புரத்தில் அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.