திருநெல்வேலி

ராமையன்பட்டி குப்பை சேகரிக்கும் மையத்தில் நீதியரசர் ஜோதிமணி ஆய்வு

28th Aug 2019 10:50 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி குப்பை சேகரிக்கும் மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பிளாஸ்டிக் மறு சுழற்சி மையம், நுண் உர செயலாக்க மையம் ஆகியவற்றில், தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் தமிழ்நாடு கண்காணிப்புக் குழுத் தலைவர் நீதியரசர் பி.ஜோதிமணி ஆய்வு மேற்கொண்டார். 
ஆய்வின்போது, ராமையன்பட்டியில் உள்ள குப்பை சேகரிக்கும் மையத்தில் உள்ள உரக்கிடங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து அங்கிருந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து குப்பைகளால் மண் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடாத வண்ணம் அவற்றை விஞ்ஞான முறையில் மேலாண்மை செய்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விஞ்ஞான மூடாக்கத்தை பார்வையிட்டு, அங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.  பின்னர் சிந்துபூந்துறை செல்வி நகரில் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
மேலும் குப்பைகளை சேகரிக்கச் செல்லும் துப்புரவுப் பணியாளர்கள், பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்துதான் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாநகரப் பகுதிகளில் கழிவுப்பொருள்களை தீ வைத்துக் கொளுத்துவது, குப்பைகளைத் தெருக்களில் தூக்கி எறிவது ஆகியவற்றைக் கண்காணித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, செயற்பொறியாளர் (திட்டம்) நாராயணன்,  மாநகர் நல அலுவலர் டி.என்.சத்தீஸ்குமார், சுகாதார அலுவலர் அரசகுமார் உள்பட பலர் இருந்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT