திருநெல்வேலி

ராதாபுரத்தில் மீனவர் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

28th Aug 2019 07:36 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட மீனவர் குறைதீர் கூட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம், தமிழ்நாடு கடல் மீனவர் மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத்  திட்டம், கடல் மீனவர் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் மீனவர்கள் தங்கள் குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஆட்சியர் பேசியது: கடல் ஆமைகள் இனவிருத்தி செய்வதற்காக ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கடலில் இருந்து வெளியேறி நிலத்தை நோக்கி வருகின்றன. அப்படி வரும் ஆமைகளை பிடிக்காமல் இனப்பெருக்கத்திற்காக விடவேண்டும். கடல் ஆமைகளை பிடிப்பதும், கடலில் மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும்.
எனவே, மாவட்ட கடலோரக் கிராமங்களான கூடுதாழை முதல் கூட்டப்புளி வரையிலான மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தாமல் மீன்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து 20 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும், 5 பேருக்கு இயற்கை மரண உதவித் தொகையையும் ஆட்சியர் வழங்கினார். 
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மீன்வளத்துறை இணை இயக்குநர் ஆதிரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், ராதாபுரம் வட்டாட்சியர் செல்வன், தனிவட்டாட்சியர் ராஜசேகர், மீனவப் பிரதிநிதிகள் உவரி அந்தோணி, கூட்டப்புளி சூடு, இன்னாசி, மணப்பாடு கயாஸ், கூத்தங்குழி சூசை அந்தோணி, கூடுதாழை லீகோரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT