திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்கள் சிரமம் அடைந்தனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்; பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களை கலந்தாய்வு மூலம் சேர்க்க வேண்டும்; தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்கெனவே மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை காரணம்காட்டி மருத்துவர் பணியிடங்களைக் குறைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுகாதார மையங்கள், வட்டார தலைமை மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணியாற்றவில்லை. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு
ஆளாகினர்.