தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு (ரேவா) சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரியும், வருகிற செப். 24ஆம் தேதி சென்னை கோட்டை முற்றுகைப் போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வண்ணார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக (திருநெல்வேலி மண்டலம்) பொது மேலாளர் அலுவலகம் முன் இப்போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் பி.மனோகரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எட்டப்பன், இ.எம்.பழனி, ராஜன், காளத்தி நாதன், ராமையா பாண்டியன், மாணிக்கம், சேதுராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
"ரேவா' மாநில துணைத் தலைவர் கே.வி.குருசாமி ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். சங்க பொதுச் செயலர் பி.முத்துகிருஷ்ணன், விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலர் வெங்கடாசலம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். "ரேவா' மாநில துணைப் பொதுச் செயலர் தேவராஜ் சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் சிவதாணுதாஸ் நன்றி கூறினார்.