காமன்வெல்த் யோகா போட்டிக்கு தகுதிபெற்றுள்ள மாணவி, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளுக்கு மாவட்ட விளையாட்டு நிர்வாகம் அரசுக்குப் பரிந்துரைக்கும் என மாவட்ட அதிகாரி கூறினார்.
ரவணசமுத்திரத்தைச் சேர்ந்த முகம்மது நஸீருத்தீன், ஜலிலாஅலி முன்னிஸா தம்பதியின் மகள் மிஸ்பா நூருல் ஹபிபா. குற்றாலம் செய்யது மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் யோகா போட்டியில், மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளதோடு, தாய்லாந்தில் அமெச்சூர் ஆசியன் யோகா விளையாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டிகளில் இருமுறை தங்கம் வென்று, காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து, அந்தப் போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகளிடம் உதவி கோரி மனு அளித்தார். இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அலுவலர் ஜெயசித்ரா அன்புச்செல்வன், மிஸ்பா நூருல் ஹபீபாவின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து அவரது சாதனைகளைக் கேட்டறிந்து வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து அவர் சர்வதேச யோகா போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளுக்காக மாவட்ட விளையாட்டு நிர்வாகம், அரசுக்குப் பரிந்துரைக்கும் என்றும் கூறினார்.
அப்போது, யோகா பயிற்சியாளர் குருகண்ணன் மற்றும் மாணவியின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.