ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை தென்காசி, திருநெல்வேலியை ஒரே மாவட்டமாகக் கருதி நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதியிடம் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் 2019-20 மற்றும் 2020-21 ஆகிய கல்வியாண்டுகளில் நடைபெறும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் இரு மாவட்டங்களையும் ஒரே மாவட்டமாகக் கருதி கலந்தாய்வு நடத்த வேண்டும்.
கல்வி மாவட்டவாரியாக மாதந்தோறும் ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டத்தை முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் நடத்த வேண்டும். இதன்மூலம் முதுநிலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், ஊதியம், ஊக்க ஊதியம் உள்ளிட்ட பிற பணப் பலன்களை வழங்குவதில் ஏற்படும் நிர்வாகரீதியான காலதாமதத்தை தவிர்க்கலாம் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.