சங்கரன்கோவிலில் நடைபெற்ற வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகளில் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனர்.
வாலிபால் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும், இப்பள்ளியின் ஆண்கள், பெண்கள் அணியினர் முதலிடம் பெற்றனர். எறிபந்து போட்டியில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளிலும் இப்பள்ளியைச் சேர்ந்த 6 அணிகளும் முதலிடம் பெற்றன. டென்னிகாய்ட் போட்டியில், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என 3 பிரிவுகளில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் விளையாடிய 12 அணிகளும், அந்தந்தப் பிரிவில் முதலிடம் பெற்றன.
செஸ் போட்டியில் மாணவர் பிரிவில் ஜூனியர் மற்றும் சீனியர் போட்டியிலும், மாணவியர் பிரிவில் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் போட்டிகளிலும் ஸ்ரீகலைவாணி பள்ளி மாணவர்களே முதலிடம் பெற்றனர். வட்டார அளவில் முதலிடம் பெற்ற இப்பள்ளியின் 26 மாணவ, மாணவிகள் மாவட்ட விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகி வெ. பொன்னழகன், உடற்கல்வி ஆசிரியர்கள் காளிராஜன், நடராஜன், விநாயகமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.