திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் தினசரி காய்கனி சந்தை வியாபாரிகள் திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தியதோடு, ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் தினசரி காய்கனி சந்தையில் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரிகள் தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில், மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் இந்தச் சந்தையில் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக கடைகளை காலி செய்யக் கோரி மாநகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, கால அவகாசம் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துவந்தனர். ஆனால், அதனை பொருள்படுத்தாமல் மாநகராட்சி சார்பில் 2ஆவதாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து திங்கள்கிழமை காலையில் வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். வியாபாரிகள் சங்கத் தலைவர் சத்தியநாராயணன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. என்.மாலைராஜா ஆகியோர் தலைமையில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: திருநெல்வேலி நகரம் தினசரி காய்கனி சந்தையை நம்பி 700 குடும்பங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். இந்த வாழ்வாதாரத்தை நம்பி வங்கிகளிலும், வெளியிலும் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தி வருகிறோம். இப்போது திடீரென மாநகராட்சி மூலம் 15 நாள்களுக்குள் கடையை காலி செய்யுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் கட்டடம் கட்ட இருப்பதால் அவகாசமும் கிடையாது; பின்பு அமைகின்ற கட்டடத்தில் முன்னுரிமையும் கிடையாது என சொல்கிறார்கள். இதுகுறித்து ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். காலஅவகாசம் வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார் என்றனர்.