திருநெல்வேலி

குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டக் கோரி மனு

27th Aug 2019 11:21 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலத்தை உடனே அமைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனு:  திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலையில் குலவணிகர்புரம் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இங்குள்ள திருநெல்வேலி-திருச்செந்தூர் இருப்புப் பாதையில் தினமும் 8-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இங்கு புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது போக்குவரத்து நெருக்கடியை கருத்தில்கொண்டு குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலத்தை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல தியாகராஜர்நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தில் நெடுஞ்சாலைத் துறைப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், தெற்கு ரயில்வேயின் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குடிநீர்த் தட்டுப்பாடு: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாளையஞ்செட்டிகுளம் ஊராட்சியில் காமராஜர் காலனி பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு திருமலைக்கொழுந்துபுரம், மேலப்பாட்டம் குடிநீர்த் திட்டக் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தாமிரவருணி தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை. 
இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், இப்பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு, சிறுவர் பூங்கா போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. ஆகவே, இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT