திருநெல்வேலி

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

27th Aug 2019 08:33 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் வட்டம், துரைசாமியாபுரம் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காலிக் குடங்களுடன் வந்த துரைசாமியாபுரம் கிராம மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆட்சியரிடம் குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொதுமக்கள் கூறியது: குலசேகரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட துரைசாமியாபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் எங்கள் பகுதியில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆழ்துளைக் கிணறு மூலமும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 6 மாதமாக எங்கள் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இதனால் பெண்கள் மற்றும் மாணவர்கள் தண்ணீரைத் தேடி நீண்ட தொலைவு சென்று காத்திருந்து எடுத்து வருகிறார்கள். கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாததால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தண்ணீர்த் தட்டுப்பாட்டால் கிராமத்தை காலி செய்யும் நிலையில் உள்ளோம். எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT