வாசுதேவநல்லூர் அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி (அர்த்தநாரீஸ்வரர்) கோயில் அலுவலகத்தில் பணம் திருடியதாக, தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட இக்கோயில் அலுவலகத்தில் இம் மாதம் 9 ஆம் தேதி வங்கியில் செலுத்துவதற்காக வைத்திருந்த ரொக்கம் ரூ. 79 ஆயிரம் திருடப்பட்டதாம். இதுதொடர்பாக, கோயில் செயல் அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.
இதில், கோயில் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணி செய்து வந்த கலைஞர் காலனியைச் சேர்ந்த பாண்டி மகன் மாரியப்பன்(40) பணத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் மாரியப்பனை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 79 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.