திருநெல்வேலி

பாளையங்கால்வாயில் ரூ.70 கோடியில் சிமென்ட் தளம் அமைக்க கோரிக்கை

18th Aug 2019 05:33 AM

ADVERTISEMENT


திருநெல்வேலி பாளையங்கால்வாயில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் எளிதாக சென்றடையும் வகையில் ரூ.70 கோடியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணியைச் செயல்படுத்த வேண்டுமென பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திடமும், சட்டப்பேரவையிலும் பாளையங்கால்வாயை மேம்படுத்த பலமுறை வலியுறுத்தியுள்ளேன். இப்போது இக் கால்வாயில் ரூ.40 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் ஓரளவு நடைபெற்று வருகிறது. பருவமழை தொடங்கும் முன்பாக இப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 
கருங்குளம் முதல் நொச்சிக்குளம் வரை சுமார் 42 கி.மீ. தொலைவுக்கு இக் கால்வாயில் சிமென்ட் தளம் அமைக்க ரூ.70 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதை செயல்படுத்தினால் கடைமடை பகுதிகளுக்கு விரைவாக பாசன நீர் சென்று சேரும். ஆகவே, அத் திட்டத்தை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். 
பாளையங்கோட்டை தமிழ்ச் சங்கம் அருகேயுள்ள பாலம், மேலப்பாளையம் கடை ரோட்டில் உள்ள தண்டன் பள்ளி தெரு பாலம், மூளிக்குளம் கால்வாய் தடுப்புச்சுவர், மேலப்பாளையம்-நத்தம் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலப்பாளையம் காஜாநாயகன் தெருவில் உள்ள சிறிய பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய சிறிய பாலம் அமைக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT