திருநெல்வேலி

தனியார் தண்ணீர் லாரிகள் ஆக.21 முதல் வேலைநிறுத்தம்

18th Aug 2019 05:29 AM

ADVERTISEMENT


தமிழகம் முழுவதும் வரும் 21-ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வேலையில் அரசு மற்றும் தனியார் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகள் வரும் 21-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.  
இது தொடர்பாக அவர் சென்னை கோவிலம்பாக்கத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தண்ணீர் லாரிகளை அதிகாரிகள் சிறைபிடிப்பதும், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 33 லாரிகள் உள்பட காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன. தனியார் தண்ணீர் லாரிகள் நீரை எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அங்குள்ள லாரிகளை உடனடியாக, அரசு அதிகாரிகள் சிறைபிடித்து விடுகின்றனர். 
தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகளை சிறைபிடிப்பதை கண்டித்தும், லாரி உரிமையாளர்கள் மீது பொய்யாக திருட்டு வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் வரும் 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். எனவே தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மற்றும் டிராக்டர்களை அன்றைய தினம் முதல் இயக்க போவதில்லை என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT